Thursday, September 13, 2012

எரிபொருள் விலை ஏற்றத்தால் எரியும் ஏழைகளின் வயிறு

எரிபொருள் விலை ஏற்றத்தால் எரியும் ஏழைகளின் வயிறு


எரிகின்ற வீட்டில் எண்ணையை ஊற்றுவது போல, ஏற்கனவே இந்த அரசாங்கம் ஏற்றிய விலைவசியையே எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழி பிதுங்கி இருக்கின்ற மக்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இப்பொழுது டீசல் விலையை தடாலடியாக உயர்த்தி இருக்கும் இந்த காங்கிரசு அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. விலைவாசியை கட்டுப்பாட்டில் வைக்கத்தெரியாத இந்த காங்கிரசு அரசாங்கம், தங்களின் இயலாமையால் ஏற்பட்ட சுமைகளை மக்களின் தலையில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 115 டாலராக ஏறிவிட்டதால் நாமும் தவிர்க்க முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை உள்நாட்டு சந்தையில் ஏற்ற வேண்டியுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.  ஆனால் இதற்க்கு முன்பு கச்சா எண்ணை 115 டாலராக இருந்த பொழுதெல்லாம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்பட்டதா? என்றால் இல்லையே.  வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் கூட கச்சா எண்ணை பல முறை 115 டாலருக்கு மேல் இருந்துள்ளது, ஆனால் டீசல் 26 ரூபாயை தாண்டி செல்லவே இல்லையே.  காங்கிரசின் ஆட்சியில் மாத்திரம் விலை ஏற்றம் ஏன்?

அவர்கள் புதியதாக கூறுகின்ற காரணம் ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக வீழ்ச்சி அடைந்து விட்டது என்று.  இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம்?. மத்திய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்பது சாதாரண சாமான்யனுக்கு கூட தெரியும். அப்படி இருக்கையிலே மத்திய அரசு செய்த தவற்றினால் ஏறிய விலையை மக்களின் தலையில் ஏற்றுவது என்ன ஞாயம்?

டீசல் விலைவாசி உயர்வு என்பது ஒரு சாதரணமான செய்தி அல்ல.  டீசல் விலை ஏறினாள், பேருந்து கட்டணம், புகைவண்டி கட்டணம், காய்கறி, உப்பு, மிளகாய், சர்க்கரை என்று மனிதன் பயன்படுத்தும் அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் ஏற்றமடையும்.  ஏற்கனவே தாறுமாறாக ஏறி இருக்கின்ற விலைவசியாலே திணறிக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு, இது மேலும் குரவலையை நெரிக்கும் செயலாகும். மக்களை பற்றியே சிந்திக்காத மந்தி(ரி)களின் கூட்டம் இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பதால் சாமான்யனின் அன்றாட பிரட்சினைகள் இவர்களுக்கு புரிவதில்லை.  டாட்டாகளையும், அம்பானிகளையும் மாத்திரம் சிந்திக்கின்ற அரசுக்கு, ஏழைகளின் தேவைகள் புரிவதில்லை. டாட்டா களுக்கும், அம்பானிகளுக்கும் நிலக்கரியையும், இயற்கை எரிவாயு மற்றும் ஏனைய இயற்கை வளங்களை மிகக்குறைந்த விலைக்கு தாரைவார்த்து எப்படி ஆதாயம் காணலாம் என்று மாத்திரம் சிந்திக்கின்ற அரசுக்கு, ஏழைகளை பற்றி சிந்திக்க நேரம் எது? டாட்டாகளுக்கும், அம்பானிகளுக்கும் அவர்களின் தேவையை எப்படி குறைந்த விலையில் பூர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கின்ற அரசு, ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை எப்படி குறைந்த விலையில் பூர்த்தி செய்யலாம் என்று சிந்திக்க நேரம் இல்லை.

கோமாளிகளின் கூடாரமாக திகழ்கின்ற மத்திய அரசாங்கத்தை, தனது குடும்பத் தேவைகாக மாத்திரம் மிரட்டும் தி.மு.க தலைவர், இந்த விலைவாசி உயர்வை குறைக்க உங்களின் கூட்டணி அரசை வலியுறுத்துவீர்களா? என்று கேட்டால், எங்களுக்கு மத்திய அரசாங்கத்தை மிரட்டத் தெரியாது என்று குதர்க்கமாக பேசுகிறார்.  மத்திய அரசிடம் தங்களுக்கு வேண்டிய இலாக்காக்களை கேட்டு பெறுவதற்கு மிரட்டத் தெறியும், கூட்டணியில் சீட்டை பெறுவதற்கு மிரட்டத் தெறியும், உறவினர்களுக்கு அமைச்சர் பதவி வாங்க மிரட்டத் தெரியும். ஆனால் ஈழத்தமிழனை காப்பாற்ற மிரட்டத் தெரியாது, ஏழை மக்களை பாதிக்கும் விலைவாசியை குறைக்க மிரட்டத் தெரியாது. இப்படிப்பட்ட சுயநலவாதிகள் என்று அரசியலில் இருந்து விலகுகிறார்களோ, அன்றுதான் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment